வங்கிகளுக்கு ரிர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடனுக்கான வட்டி விகிதத்தைக் (ரெப்போ ரேட்) குறைக்கும்போதெல்லாம் வீட்டுக் கடன் குறையும் என்ற எண்ணமும் பொதுமக்களுக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால், ரெப்போ ரேட் குறைக்கப்படும் போதெல்லாம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை எல்லா வங்கிகளும் உடனடியாக குறைத்துவிடுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது.
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. உடனடியாக வட்டி விகிதத்தைக் குறைத்துவிட்டது. ஆந்திரா வங்கியும்கூட வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிடவில்லை. இருந்தாலும் வங்கிகள் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மட்டும் நான்காவது முறையாக ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த ஜனவரியில் 0.25 சதவீதம், மார்சில் 0.25 சதவீதம், ஜூனில் 0.25 சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. தற்போது 0.50 சதவீதம் குறைக்கப்படுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 1.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் நான்கு முறை ரெப்போ ரேட் குறைக்கப்பட்டிருப்பது முன் எப்போதும் இல்லாத நிகழ்வு என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
ரிசர்வ் வங்கிக்கு வணிக வங்கிகள் செலுத்தும் வட்டி விகிதம் குறைவதால், அந்தப் பலன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வுதான். அந்த வகையில்தான் ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பை அடுத்து 9.75 என்ற வீட்டுக் கடன் வட்டியை 9.35 சதவீதமாக எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது. ஆந்திரா வங்கி 10 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஆனால், பிற பொதுத்துறை வங்கிகளும், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட தனியார் வங்கிகளும் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட வில்லை.
கடந்த முறை ரெப்போ ரேட் குறைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான வங்கிகள் இதே பாணியைத்தான் பின்பற்றின. வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யாததற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடும் அதிருப்தி தெரிவித்தார். இதேபோல நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் வட்டிக் குறைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த முறையும் ரெப்போ ரேட் வட்டிக் குறைப்பை அடுத்து தனது முந்தைய நிலையை ரகுராம் ராஜன் வலியுறுத்தவே செய்திருக்கிறார். “இந்த ஆண்டு ஜனவரி முதல் நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் மொத்தம் 1.25 சதவீத வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜனவரிக்கு பிறகு வங்கிகள் 0.30 சதவீத அளவில் மட்டுமே வட்டியைக் குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்றவாறு வட்டிக் குறைப்பின் முழு பயனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும்” என்று ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம் வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்ய வேண்டும் என்பதை நேரடியாகவே ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்லியிருக்கிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் மட்டுமல்ல, நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். “ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பை, வங்கிகள் நுகர்வோருக்கு முழுமையாக பரிமாற்றம் செய்ய வேண்டும்” என்று வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். கட்டுமான அமைப்பான கிரெடாய் தேசிய தலைவர் கீதாம்பர் ஆனந்த் கூறுகையில், “ இந்த முழு பயனை வீடு வாங்குவோருக்கு வங்கிகள் அளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு முறையும் இதை வலியுறுத்திவருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் வட்டிக் குறைப்பை வங்கிகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்படிப் பல தரப்பிலும் வங்கிகள் வட்டிக் குறைப்பைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. வீட்டுக் கடன் வாங்கிய பொதுமக்களும் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார்கள். வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்தால் வீட்டுக் கடன் வாங்குவது அதிகரித்து, வீடு விற்பனையும் கொஞ்சம் அதிகரிக்கும் என்று பில்டர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். பல தரப்பினரும் வட்டிக் குறைப்புக்கு வலியுறுத்துவதால் வங்கிகள் வட்டியைக் குறைக்குமா? இதுகுறித்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் என்ன கூறுகிறார்.
“ஓர் ஆண்டில் முதல் 9 மாதங்களில் 1.25 சதவீதம் அளவுக்கு ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது சாதாரண நிகழ்வு அல்ல. எனவே அந்தப் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சொல்லியிருப்பதையும் வங்கிகள் கவனத்தில் கொள்ளும். எல்லா வங்கிகளும் நிச்சயம் வட்டிக் குறைப்பை செய்துதான் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் வங்கிகள் நிச்சயம் வட்டியைக் குறைக்கும். வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பலன் இருக்கும்” என்றார்.
எஸ்.பி.ஐ., ஆந்திரா வங்கியைத் தொடர்ந்து தற்போது ஆக்சிஸ் வங்கி 0.35 சதவீதமும், ஓரியண்டல் வங்கி 0.20 சதவீதமும் குறைத்துள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து வட்டிக் குறைப்பு அறிவிப்புகளை வங்கிகள் வெளியிடும் என்ற எதிர்பார்க்கலாம்