சொந்த வீடு வைத்திருப்பவர்களைவிட வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் அதிகம். வாடைகை வீடு என்று வரும்போது வாடகையைத் தவிர்த்து முன்பணமாக (அட்வான்ஸ்) ஒரு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஏழை எளிய மக்களை பொறுத்தவரை முன்பணம் கொடுப்பது பெரும் சவாலகவே இருக்கும். 10 மாத வாடகை அல்லது 5 மாத வாடகை என்று வீட்டு உரிமையாளர்கள் கேட்பார்கள். ஆனால், ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாகக் கொடுத்தால் போதும் என்று சமீபத்தில் சென்னை 13-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் கூதலாகக் கொடுத்த வாடகை முன்பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?
வழக்கும் தீர்ப்பும்
அண்மையில் சென்னை வீட்டு வாடகைதாரருக்கும் உரிமையாளருக்குமான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வாடகைதாரர்களின் வயிற்றில் பாலை வார்த்தது என்று சொல்லலாம். இரண்டு மாத வாடகையைக் கொடுக்காத வாடகைதாரர் வீட்டைக் காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், முன் பணமாக எவ்வளவு கொடுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த, வீட்டு வாடகை தொடர்பான வழக்கில், வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர், ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்தால் போதும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலுவையில் உள்ள வாடகைப் பணம், ஒரு மாத முன்பணம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு மீதிப் பணத்தை வாடகைதாரருக்கு வீட்டு உரிமையாளர் கொடுத்துவிட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.
இந்த வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு மாத வாடகையை முன் பணமாக வைத்துக்கொண்டு, எஞ்சிய தொகையைக் கேட்டால் உரிமையாளர்கள் கொடுப்பார்களா? ஒரு வேளை ஒரு மாதத்துக்கு மேல் கொடுக்கப்பட்ட வாடகைப் பணத்தை உரிமையாளர்கள் கொடுக்க மறுத்தால் எங்கு முறையிடுவது?
வழக்கறிஞரின் விளக்கம்
“வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் ஒரு மாத வாடகையைக் கொடுத்தால் போதும் என்று சட்டம் சொல்கிறது. எனவே முன்பணமாக ஒரு மாத வாடகைப் பணத்துக்கு மேல் உரிமையாளர்கள் கேட்க முடியாது. ஏற்கெனவே கூடுதலாக முன்பணம் கொடுத்திருந்தால் அதை உடனே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாக வைத்துகொள்ளச் சொல்லிவிட்டு மீதிப் பணத்தை கழிக்கச் சொல்லிவிடலாம். வீட்டைக் காலி செய்வதற்கு முன்பாக நீங்கள் திட்டமிட்டு வாடகைப் பணத்தைக் கழித்துவிடலாம்” என்கிறார் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.பி. விஸ்வநாதன்.
“பத்து மாதங்களில் வாடகைதாரர் வீட்டைக் காலிசெய்யத் தீர்மானித் திருக்கும் பட்சத்தில் அதை முன்கூட்டியே உரிமையாளர்களுக்குச் சட்டப்படி ஒரு நோட்டீஸை அனுப்பித் தெரிவித்தால் போதுமானது. அதை உரிமையாளர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மறுக்க முடியாது. ஆனால், இன்னொரு விஷயத்தை மறக்கக் கூடாது. வாடகைதாரர்கள் கூடுதலாக வீட்டு உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுத்ததற்குச் சான்று இருக்க வேண்டும். வீட்டு வாடகை ஒப்பந்தம் மட்டுமல்லாமல், ரசீது, செக் மூலம் கூடுதல் முன்பணம் கொடுத்ததற்கு அத்தாட்சி இருந்தாலும் போதுமானதே” என மேலும் அவர் கூறினார்.
வாடகைதாரர்கள் என்ன நினைக்கிறார்கள்?
வீட்டு வாடகையாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அதற்குப் பத்து மாத வாடகை முன் பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. பெருந்தொகையாக இருக்கும்பட்சத்தில் பலரும் கடன் வாங்கியோ நகைகளை அடமானம் வைத்தோ அந்தப் பணத்தை உரிமையாளர்களுக்குத் தர வேண்டியிருக்கிறது. இது பற்றி வீட்டு வாடகைதாரர்கள் என்ன நினைக்கிறார்கள்?
“ஒரு மாத வாடகைப் பணத்தை முன்பணமாகக் கொடுத்தால் போதும் என்பது வாடகை வீட்டில் குடியிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ரொம்ப இனிப்பான செய்திதான். ஆனால், என்னதான் சட்டங்கள் இருந்தாலும் அதைப் பின்பற்ற வேண்டுமே. முதலில் கூடுதல் முன்பணத்தைக் கழித்துகொள்வதாக உரிமையாளரிடம் சொன்னால், உடனே வீட்டைக் காலி செய்துவிடுங்கள் என்றுதான் பதில் வரும். இதுதான் யதார்த்தம். குழந்தைகளுடன் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு உடனடியாகப் புதிய வீட்டுக்குக் குடியேறுவது நடைமுறையில் கஷ்டம்.
இதற்காக உரிமையாளருக்கு எதிராக வழக்குப் போடுவதையெல்லாம் வீட்டில் யாரும் விரும்பவும் மாட்டார்கள். எனவே வீட்டு உரிமையாளர்கள் சட்டப்படி நடந்துகொண்டால் மட்டுமே ஒரு மாத வாடகையை முன் பணமாகக் கொடுப்பதும், கூடுதலாகக் கொடுத்தப் பணத்தைக் கழிப்பதும் சாத்தியமாகும்” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ராஜகோபால்.
ஆனால், வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டில் ஏதேனும் சேதம் ஏற்படுத்தினாலோ, பழுது ஏற்படுத்தினாலோ அந்தப் பணத்தை அவர்களிடம்தான் வசூலிக்க வேண்டியிருக்கும். கூடுதல் முன் பணம் கையில் இருக்கும்போது சேதத்திற்குரிய பணத்தை எடுக்க வழி உள்ளது. அப்படிப் பணம் இல்லாதபோது வாடகைதாரர்களிடம் பணத்தைக் கேட்டுப் போராட வேண்டியிருக்குமே என்பது வீட்டு உரிமையாளர்களின் எதிர்க் கேள்வியாக உள்ளது.