நம்முடைய வீடு என்பது வெறும் மணல், கல், சிமெண்ட் கலவையால் ஆனது என்ற எண்ணத்தை இனி மாற்றிக்கொள்ளுங்கள். சில பேருக்கு வீட்டுக்கான பேரை வைப்பதில் இருக்கும் அக்கறை, அதைப் பராமரிப்பதில் இருப்பதில்லை. `நந்தவனம்’ என்று வீட்டுக்குப் பெயர்வைத்துவிடுவார். வீட்டில் நுழைந்தால் குப்பைக்கூளமாக இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் வீட்டின் பராமரிப்பு அதன் தோற்றத்தில் தெரியும்.
உத்தரத்தில் நீர்
ஆண்டுக்கு ஒருமுறை முடியாவிட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது சுண்ணாம்பு அடிப்பதைத் தவிர்க்காதீர்கள். உத்தரத்தில் குளிர்காலத்தில் ஓதம் (நீர் படிவது) தெரியும். உத்தரம் குறிப்பிட்ட அந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை அறிவிக்கும் குறிப்புதான் அது. இப்படி ஓதம் தெரியும் இடங்களில் லேசாக சுவரைத் தட்டிப் பூசவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உத்தரத்தின் சுவர் பலமாகும். இதைக் கவனிக்காவிட்டால், நீரில் உத்தரத்தின் சுவர் ஊறி விரிசல் அதிகமாகி, காரை பெயர்ந்துவிழுவது போன்ற விபரீதங்கள் நடக்கும்.
தற்போது நகரங்களில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களே அதிகம். இதில் இரண்டாவது மாடியில் இருப்பவரின் பாத்ரூம் உத்தரத்தில் ஓதம் தோன்றினால், அவரின் வீட்டுக்கு நேர் மேலாக மூன்றாவது மாடியில் இருப்பவரின் ஒத்துழைப்போடு (ஏனென்றால், அவர் வீட்டின் பாத்ரூம் தரையையும் தட்டி பூசவேண்டியது அவசியம்) சரிசெய்ய வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செயல்படும் அசோசியேஷன் மூலம் சுண்ணாம்பு அடிப்பது, கிரில் கம்பிகளுக்கு பெயிண்ட் அடிப்பது போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
மாடி பராமரிப்பு
தனி வீடுகளிலும் சரி அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சரி பெரும்பாலும் மாடிப் பகுதியை வேண்டாத பொருள்களைக் குவிக்கும் திறந்த வெளி குப்பைத் தொட்டிகளாக வைத்திருப்பார்கள். மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகள், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் டேங்கிலிருந்து லீக் ஆகி வெளியேறும் தண்ணீர் என எல்லாம் சேர்ந்து சேறும் சகதியுமாக இருக்கும். காய்ந்துவிட்டால் அடை அடையாக அழுக்குப் படிந்து இருக்கும். இப்படிப் பராமரிக்கப்படாத மாடிப் பகுதியால் அந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்களுக்குச் சுகாதாரக் கேடால், உடல் ஆரோக்கியம் கெடும். கட்டிடமும் பலவீனமாகும்.
குழந்தைகளின் அறைகள்
உடைகள், அலங்காரப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றை அதனதன் இடத்தில் வைத்துப் பயன்படுத்துவதற்குக் குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள். வீட்டில் குழந்தைகளின் அறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை படுக்கை அறையில் சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் தங்கும் அறையில் அடர்ந்த நிறத்தில் ஒற்றை அடுக்கு மட்டுமே வண்ணக்கலவை பூசுவது நலம்.
செல்லப் பிராணிகளுக்கான இடங்கள்
வீட்டில் செல்லப் பிராணிகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை தற்போது நகரங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடமும் அதிகரித்துள்ளது. செல்லப் பிராணிகளை வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் கட்டிப்போட்டு வைத்திருக்க பழக்க வேண்டும். குறிப்பாக வீட்டு விலங்குகளை வைத்திருக்கும் இடத்தில் ஈரம் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளுக்காக வைத்திருக்கும் கார்பெட், உணவு உண்ணும் பாத்திரம் போன்றவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் வீட்டு விலங்குகள் புழங்கும் இடத்திற்கெனப் பிரத்யேகமாகத் தயாரித்து விற்கப்படும் சிறப்பு வகை பெயிண்டுகளை பூசலாம்.
குடியிருக்கும் இடத்தை எவ்வாறு வைத்துக்கொண்டால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்பதைச் சென்னையைச் சேர்ந்த பிராம்ப்ட் பதிப்பகம் பல நூல்களின் வழியாக விளக்குகின்றது.
இன்டீரியர் ஒர்க்ஸ், வீட்டில் மின் சாதனங்களை எப்படிப் பராமரிப்பது, வீட்டில் இருக்கும் பெண்களே மின் கட்டணத்தை எப்படி எளிய வகையில் கணக்கிடுவது, வீட்டில் நோய்களைப் பரப்பும் பூச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது, வீட்டு மரச் சாமான்களை அவற்றிடம் இருந்து எப்படிப் பாதுகாப்பது என்பதைத் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல்கள் விளக்குகின்றன.