வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் நலனுக்காக சபரிமலையில் விசேஷ பூஜை

sabarimala_big

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழையின் கோர தாண்டவம் காரணமாக பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட தமிழக மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவி கரம் நீட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை உள்பட தமிழக மக்கள் மீண்டு வரவும் அவர்கள் துயரம் நீங்கவும் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் விசேஷ பூஜை நடத்த கேரள தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி இன்று காலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அஷ்டதிரவிய மகாகணபதி ஹோமமும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு புஷ்பாபிஷேகமும் அய்யப்பனுக்கு நடைபெறுகிறது.

இதே போல் சபரிமலையில் உள்ள மாளிகை புரத்தம்மன் கோவிலும், பம்பை கணபதி கோவிலிலும் இன்று காலையில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இன்று மாலை மாளிகை புரத்தம்மன் கோவிலும் பம்பை கணபதி கோவிலிலும் மீண்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட தமிழக மக்கள் இயல்புநிலைக்கு திரும்பவும், மீண்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருவதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றும் அதிக அளவில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் மெட்டல் டிடெக்டர் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பக்தர்களின் உடமைகளும் சோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply