ராஜபக்சேவின் ஏவல் படையா ஆந்திர காவல்துறை? வேல்முருகன் கேள்வி

velmuruganஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்படாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் ஒரு ஆந்திர பஸ்ஸைக்கூட ஓட அனுமதிக்க மாட்டோம் என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தமிழக, ஆந்திர எல்லையில் பதட்டம் நிறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவுக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் ஆந்திரா எல்லையில் அந்த மாநில போலீசாரால் தடுக்கப்பட்டோம். பின்னர் ஆந்திரா எல்லையிலேயே ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தி ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தோம்.

இன்று அதிகாலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடு நடத்திய ராஜபக்சேவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். ஆனால் ஆந்திரா போலீசாரோ கருப்புக்கொடி காட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சுந்தர் உள்ளிட்ட 25 பேரை மிருகத்தனமாக தாக்கி அவர்களது வாகனங்களை நாசமாக்கி தனித்தனியே சிறையில் அடைத்துள்ளது.

இதேபோல், ம.தி.மு.க. முன்னணி தலைவர்களான மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வித்யாதரன் என பலரையும் ஆந்திரா காவல்துறை கொடூரமாக தாக்கி சிறையில் அடைத்துள்ளது. 10க்கும் மேற்பட்ட செய்தியாளர்களையும் ஆந்திரா காவல்துறை மிகக்கொடூரமாக தாக்கியும் அவர்களது செய்தி உபகரணங்களை உடைத்தும், பறிமுதல் செய்தும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் “ராஜபக்சேவின் ஏவல்” படைபோல ஆந்திரா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

அதேபோல் தமிழ்நாட்டு செய்தியாளர்களை உடனே விடுவித்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை ஆந்திரா காவல்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நாசமாக்கிய செய்தி உபகரணங்களுக்கான உரிய நஷ்ட ஈட்டை ஆந்திரா அரசு வழங்க வேண்டும். மேலும், இந்த தாக்குதலுக்கு ஆந்திரா அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் ராஜபக்சேவின் கூலிப்படையாக குண்டர் படையாக நின்று தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தங்களது கடமையை செய்ய சென்ற தமிழ்நாட்டு செய்தியாளர்களையும் உடனே ஆந்திரா காவல்துறை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் அந்த மாநில பஸ்கள் எதனையும் அனுமதிக்கமாட்டோம்.

அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் அத்தனை ஆந்திரா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply