தமிழ்நாட்டுக்கு சொந்தமான ஒகேனக்கல்லுக்கு உரிமை கொண்டாடினால் பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது.
அங்கே பேசிய சித்தராமையா, ”ஒகேனக்கல் எந்த மாநில எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்னை நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 68 கி.மீ. தூரத்துக்கு எல்லை பிரச்னை இருந்து வருகிறது. மத்திய சர்வே ஆணையம் உடனடியாக கர்நாடக-தமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் சர்வே மேற்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
1952 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த நிலப்பரப்புகள்தான் மிக அதிகம். ஒருகாலத்தில் சென்னை மாகாணம் என்பது திராவிடர் இனப் பழங்குடிகள் அதிகம் வாழும் ஒடிசாவின் கோராபுட் மாநிலம் வரை இருந்தது என்பது வரலாறு.
ஆனால், இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் தாரைவார்க்கப்பட்ட பெருங்கொடுமை ”இந்திய தேசியத்தின் பெயரால்” அரங்கேறியது. எங்களது ஒகேனக்கல் மீது உரிமை கோருகிற கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரும் கூட தமிழ்நாட்டின் ஒரு அங்கம் என்ற கோரிக்கை இன்னமும் காலாவதியாகவில்லை என்பதை சித்தராமையா மறந்துவிட்டு பேசக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறேன்.
காவிரியில் தமிழகத்துக்கான நியாயமான சட்டப்பூர்வமான உரிமையை மதிக்க மறுத்து மேகேதாட்டுவில் பல்வேறு தடுப்பு அணைகளைக் கட்டுவோம் என்று எதேச்சதிகரமாக பேசி வருகிறது கர்நாடகா. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, மாநில அரசும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேகேதாட்டு விவகாரத்தை திசைதிருப்பும் உள்நோக்கத்துடன், தமிழகத்தை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கர்நாடகா முதல்வர் பேசியிருப்பதை ஏற்க முடியாது. அது கடும் கண்டனத்துக்குரியது.
ஒகேனக்கல் தமிழ்நாட்டின் ஒரு அங்கம். இதற்கு கர்நாடகா உரிமை கொண்டாடினால் கர்நாடகாவில் உள்ள கோலாரும், பெங்களூரும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற முழக்கம் பெரும் போராட்டமாக வெடிக்கும்” என்று கூறியுள்ளார்.