தமிழகத்திற்கு மத்திய அரசு தரும் நிவாரணங்கள் எவை? நாளை வெங்கையா நாயுடு அறிவிப்பு?
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புரட்டி போட்ட மழை வெள்ளம் காரணமாக ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என்று அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் தமிழக வெள்ள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடர் (Calamity of Severe Nature) என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு தரப்படும் சிறப்பு நிவாரண உதவிகள் என்ன? என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு நாளை சென்னை வருகிறார்.
இதுகுறித்து நேற்று வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியபோது, ” நாளை ஞாயிற்றுக்கிழமை நான் தமிழகம் செல்ல இருக்கிறேன். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறேன். பிறகு தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகு இதைப் பற்றி பேசலாம்” என்று கூறியுள்ளார்.