நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கான சாத்தியத்தை குறைப்போம் என்றும் கருப்புப் பணத்தை நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வர சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம் என்றுதான் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாகவும் அதை 100 நாட்களுக்குள் செய்து முடிப்போம் என்று கூறவில்லை என்றும் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
100 நாட்களில் கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவருவோம் என பாரதிய ஜனதா கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று என நேற்று கேள்வி எழுப்பிய காங்கிரஸுக்கு வெங்கையா நாயுடு பதிலளித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “100 நாட்களில் கொண்டு வருவோம் என்று எங்கு கூறினோம்? அவ்வளவு முதிர்ச்சியற்றவர்களா நாங்கள், 100 நாட்கள் என்று கூறும் போதெல்லாம் நடவடிக்கைகள் 100 நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றே பொருள்.” என்ற நாயுடு, கருப்புப்பண விவகாரம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அயல்நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் ஐ.மு.கூ ஆட்சியில் நிதியமைச்சர் அயல் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பெயர்களை வெளியிடவில்லை என்று வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார்.