ஊடகக் கட்டிடக் கலை என அழைக்கப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டிடக்கலை இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கேட்பதற்குப் புதிய சொல்லாகத் தோன்றினாலும் இந்தப் போக்கு நம் ஊர்களுக்குள் பிரவேசித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. கணிணியால் இயக்கப்படும் வரவேற்புப் பலகைகள் கண்கவரும் வண்ணங்களில் விதவிதமான உருவங்களை மூன்று பரிமாணங்களில் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதைப் பார்க்கிறோம்! ஷாப்பிங் மால்கள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், பெரு வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இந்த ஊடகக் கட்டிடக் கலையைப் பிரமாதமாகப் பிரயோகித்து வருகின்றன.
இத்தகைய ஊடகக் கட்டிடக் கலைக்கான கருத்தரங்கம் சென்ற வாரம் டென்மார்க் நாட்டின் ஆர்ஹஸ் நகரில் நடத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்கேற்று ஊடகக் கட்டிடக் கலையின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 2014-ம் ஆண்டின் தலை சிறந்த 5 ஊடகக் கட்டிடக் கலை கட்டுமானங்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பரிசளிக்கப்பட்டன. தொழில்நுட்பத்தையும் கட்டிடக்கலையையும் அழகியலோடு ஒன்றிணைத்தமைக்குப் பரிசு வென்ற கட்டுமானங்கள் இவை:
3டி செல்ஃபி கட்டிடக் கலை
உங்கள் செல்ஃபி படங்களை 4 அங்குலம் ஸ்மார்ட் ஃபோனில் படம் பிடித்து 15 அங்குலம் கணினியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் உள்ள ’மெகா ஃபேஸ்’ கட்டிடத்தின் உள்ளே சென்று தானியங்கி காமிரா மூலம் புகைப்படம் எடுத்துவிட்டுக் கட்டிடத்தின் முன்னால் நின்று அண்ணாந்து பாருங்கள். 8 மீட்டர் உயரக் கட்டிடம் முழுவதும் முப்பரிமாணத்தில் உங்கள் முகம் பிரமாண்டமாகத் தோன்றுவதைப் பார்த்து அசந்து போவீர்கள்.
3டி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் 11000 எல்இடி விளக்குகள் இந்தக் கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பல்புகள் வெறும் ஒளி பாய்ச்சுவதோடு நின்றுவிடுவதில்லை. உங்கள் முகத்தில் இருக்கும் கண்கள், மூக்கு, வாய் என வளைவு, நெளிவு, மேடு, பள்ளங்களுக்கு ஏற்றாற்போல கட்டிடத்தில் உள்ள விளக்குகள் நகர்ந்து தத்ரூபமாக உங்கள் முகத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இதை வடிவமைத்த ஆஸீப் அலிக்கு 2014-ம் ஆண்டின் முன்மாதிரி கட்டிடக் கலைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
பணம் கொழிக்கும் கட்டிடக் கலை
கோபன்ஹேகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற்சாலைக் கூட்டமைப்பு கட்டிடமான ‘தியா லைட்ஸ்’ 4000 சதுர மீட்டர் பரப்புடையது. அத்தகைய பிரம்மாண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ணங்களில் தீ ஜுவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும்? கட்டிடக் கலை நிபுணர் மார்டின் கைவண்ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது ‘தியா லைட்ஸ்’. பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு ‘ஆப்’ மூலம் இந்தக் கட்டிடத்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன் ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கினாலும் அது அப்படியே அந்தக் கட்டிடத்தில் தோன்றும்.
ஜொலிக்கும் மின் ஆலை
டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் இயங்கிவரும் ‘எனர்ஜி டவர்’ மின் ஆலைக்குச் சிறந்த அனிமேட் செய்யப்பட்ட கட்டிடக் கலை விருது வழங்கப்பட்டது. இந்த மின் ஆலையின் புகைக் கூண்டுக் குழாய் மிக நீளமானதால் வெளியேறும் புகை அர்ஹஸ் நகர வாசிகளுக்கு எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். நகரின் அழகைக் கெடுப்பதாக எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்து வந்த இந்த மின் ஆலை தற்போது எரிக் வான் எகிரெட் என்ற கட்டிடக் கலை நிபுணரின் புத்திசாதுர்யத்தால் பெருமை சேர்க்கும் கட்டிடமாக மாற்றப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் உட்புறத்தில் இரட்டை அடுக்குகள் இருப்பதால், இடைப்பட்ட பகுதியில் வண்ணமயமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தினார் எரிக். எண்ணங்களின் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் ‘எனர்ஜி டவர்’கட்டிடம் உயிர் பெற்ற கட்டிடமாக மாறியுள்ளது எனப் பாராட்டப்பட்டுப் பரிசளிக்கப்பட்டது.
மிதக்கும் டிஜிட்டல் ஓவியம்
லேசர் தொழில்நுட்பம் வெட்ட வெளியில் பல உருவங்களை உருவாகி நடனமாடச் செய்யும் வல்லமை படைத்தது. அதன் அடுத்த கட்டம் ‘லைட் பாரியர்’ டிஜிட்டல் கலை எனலாம். புகை போன்ற வடிவில் மிதக்கும் கிராஃபிக் உருவங்களை நடனமாடச் செய்கிறது லைட் பாரியர். ரஷ்யாவைச் சேர்ந்த கிம்சி மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிப்ஸ் இருவரும் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்கள். வெறும் ஒளி விளக்குகளைக் கொண்டே கதை சொல்லும் லைட் பாரியர் சிறந்த வெட்ட வெளி ஊடகக் கலை விருதை வென்றது.
மக்களின் கட்டிடக் கலை
கென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரில் தனியார் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குழப்பங்கள் ஏராளம். இந்த நிலையைச் சீர் செய்திருக்கிறது தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் வழித் தடங்களைக் கண்டறிய உருவாக்கப்பட்டது ‘மடாடஸ்’ என்னும் மொபைல் ஃபோன் ஆப்ஸ். நைரோபி பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி இணைந்து சிறந்த முறையில் டிஜிட்டல் வரைபடம் உருவாக்கியதைப் பாராட்டி ‘பங்கேற்புக் கட்டிடக் கலை’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.