உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு வயது 86.
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் வசித்து வந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் நேற்று மாலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலில் நோய் தொற்று மற்றும் சளித்தொல்லைகள் இருந்ததாக கூறப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்தார்.
பராசக்தி, மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதலாளி படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்றது.
1962ல் தி.மு.க. சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய நடிகர்களில் முதன் முதலாக எம்.எல்.ஏ. ஆனது எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து 1981ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அரசு சிறு சேமிப்பு திட்ட துறையில் துணை தலைவராகவும் பணியாற்றினார்.
பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். இதனாலேயே இலட்சிய நடிகர் என்ற பட்ட பெயரோடு அழைக்கப்பட்டார்.