ஜெயக்குமாரின் ரகசியங்களை வெளியிடுவோம்: வெற்றிவேல் எம்எல்ஏ எச்சரிக்கை

ஜெயக்குமாரின் ரகசியங்களை வெளியிடுவோம்: வெற்றிவேல் எம்எல்ஏ எச்சரிக்கை

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி இணைய ஒருபக்கம் முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் இரு அணிகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தும் எச்சரிக்கை விடுத்தும் இணைப்புக்கு தடங்கலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தினகரன் அணியினர்கள் இரு அணியினர்களையும் தாக்கி கருத்து கூறி வருகின்றனர்.

தினகரன் அணியின் எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ‘அமைச்சர்கள் தற்போது வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் இவர்கள் எங்கே போனார்கள். இரு அணிகள் இணைவதற்கு 2 மாதம் அவகாசமும் கொடுத்தார் தினகரன். ஆனால், இருதரப்பிலும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டது.

சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இல்லையெனில் இந்த ஆட்சியும் கிடையாது, இந்த அமைச்சர்களும் இல்லை. கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் தலைமைக் கழகத்துக்கு விரைவில் வருவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. எங்கள் தாய் வீட்டுக்குப் போவதை போலீஸாரால் எப்படி தடுக்க முடியும். இப்போது கூட நான் தலைமைக் கழகத்துக்கு போவேன். அது எங்கள் அலுவலகம்.

கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இது தொடர்பாக சசிகலா புஷ்பா எம்பி மற்றும் ஆம்ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் நேரத்தில் சின்னம் ஒதுக்குவது, சின்னத்தை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளராக யார் இருக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. ஜெயக்குமார் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் நீதிமன்றத்துக்கே போகாத வக்கீல். அவர் சட்டம் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. ஜெயக்குமார் தொடர்ந்து இதுபோல பேசினால் அவரது ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறினார்.

Leave a Reply