கோடைக்கால ஆலோசனைகள்: வெப்பத்தை போக்கும் வெட்டிவேர்.

320px-Fragrant_root_vetti-verகோடைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பே அனல் அடிக்கும் வெயிலும், வியர்வை வழியும் கொடுமையும் தொடங்கிவிடும். பருவ நிலை மாறும்போதே, ஒருசில நோய்களும் தலைகாட்டத் தொடங்கிவிடும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டி வேர் மூலிகைக்கு நிகர் இல்லை. பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் இதை உபயோகப்படுத்தலாம். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்துமே மகத்தானவை.

வெட்டி வேரை குரு வேர், விழல் வேர், வீரணம், இருவேலி என்றும் அழைப்பர். அனைத்து வகை நிலங்களிலும் வளரும் இயல்புடையதாக இருந்தாலும், மணற்பாங்கான ஆற்றங்கரையோரங்களில் சிறப்பாக செழித்து வளரக்கூடியது வெட்டி வேர். கொத்துக் கொத்தாகப் படர்ந்து பரவலாக வேரோடும் இந்த மூலிகைத் தாவரம் சுமார் ஐந்து அடி வரை வளரும் புல் வகையைச் சார்ந்தது. வேர்கள் சுமார் நான்கு அடிகள் வரை நீண்டிருக்கும்.

கோடைக் காலத்தில் ஏற்படும் நீர்க் கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள், சுலபமாக நம்மைத் தொட்டுப் படரும். அந்த நோய்களை மிக எளிதில் விரட்டி அடிக்கும் இந்த வெட்டி வேர், ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகையும் அளிக்கக்கூடியது.

வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடியும். இதற்கு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் தூளைப் பசையாக்கி, தலையில் பரவலாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடல் சூடு தணிந்து, முகத்தில் எண்ணெய் வடிவது நின்று பளிச்செனக் காட்டும்.

காலநிலை மாறுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றத்தால் இளமையில் முகப் பருக்கள் வருவது சகஜம். அதிக உஷ்ணத்தால், சிலருக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். பொடித்த வெட்டி வேர்த் தூளை தண்ணீர் விட்டுப் பசையாக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி, மென்மையான பருத்தித் துண்டால் துடைத்துக்கொள்ள வேண்டும். உடல்வாகுக்கு ஏற்றவாறு தினசரி அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி ‘பேக்’ போட்டு வந்தால், பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்குத் தேய்த்துவர, தலைமுடியின் வேர்க்கால்கள் பலப்படும். முடி உதிர்வது நிற்கும். பளபளப்பாகவும் கருமையாகவும் வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.

நன்றாகச் சுத்தப்படுத்தி உலர்த்திப் பொடித்த வெட்டி வேர்த் தூளையும், பெருஞ்சீரகம் என்னும் சோம்புத் தூளையும் சம அளவு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்க வேண்டும். இதை, தினமும் காலையில் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற கோடைக்காலக் கடுப்பு நோய்கள் காணாமல் போகும்.

வெட்டி வேர் குடிநீர் குளிர்ச்சியைத் தந்து நா வறட்சியைப் போக்கும். புதிய மண்பானை வாங்கியதும், இரண்டு மூன்று நாட்கள் தண்ணீரை மாற்றி மாற்றி நிரப்பிவைத்து அலசி சுத்தப்படுத்திப் பழக்க வேண்டும். இந்த மண்பானையில் ஒரு கைப்பிடி சுத்தமான வெட்டி வேரையும், சிறிது திருநீற்றுப் பச்சிலையையும் போட்டு, அதில் நல்ல நீரை ஊற்றிவைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். நா வறட்சி, தாகம் தீரும்.  மன அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சி கூடும்.

வெட்டி வேரால் தட்டி செய்து வீட்டின் ஜன்னல் திரைகளாகப் பயன்படுத்தலாம். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல நறுமணம் வீசும். சில்லென்ற இதமான காற்றுக்கும் உடல் எரிச்சல் தணிக்கவும் வெட்டி வேர் விசிறியைப் பயன்படுத்தலாம்.

இனி, வெயிலுக்கு ‘வெட்டிவேர்’தான் துணை!

Leave a Reply