விஜய்யின் சுவிட்சர்லாந்து பயணம் ஏன்? புதிய தகவல்கள்
இளளயதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் சென்னை படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் அபர்ணா வினோத் ஆகியோர்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவர்களுக்கும் சுவிஸ் நாட்டின் விசா எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே சுவிஸ் நாட்டிற்கு ‘விஜய் 60’ குழுவினர் போய் லொகேஷன் பார்த்துவிட்டு திரும்பியுள்ளதாகவும், அந்நாட்டின் இயற்கை எழில்சூழ்ந்த அழகிய இடங்களில் இரண்டு பாடல் காட்சிகளும் ஒரு ஸ்டண்ட் காட்சியும் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார்.