ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையின் போது விஜய் ரசிகர்கள் ஏற்படுத்திய பரபரப்பு.

vijay fans postersசொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார். தீர்ப்பு வெளிவந்த தினமான செப்டம்பர் 27ஆம் தேதி  விஜய் ரசிகர்கள் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து இனிப்பு கொடுத்து கொண்டாடினர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு பாராட்டு தெரிவித்தும், தமிழகத்திற்கு விடுதலை வாங்கித்தந்த நீதிபதி குன்ஹாவுக்கு நன்றி தெரிவித்தும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் நேற்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு குறித்த விசாரணை நடைபெற்றபோது, அதே விஜய் ரசிகர்கள் திடிரென பல்டி அடித்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட  தண்டனைக்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக அவருக்கு ஜாமீன் கொடுக்க வலியுறுத்தியும் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அவர் விரைவில் விடுதலையாகி வெளிவர இறைவனை  பிரார்த்திப்பதாகவும், அவருக்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்குவதாகவும் அந்த போஸ்டரில் தெரிவித்திருந்தனர். விஜய் ரசிகர்களின் இந்த திடீர் பல்டி போஸ்டர்களை பார்த்து பொதுமக்கள் கிண்டலடித்தவாறு சென்றனர்.

இதுகுறித்து விஜய் ரசிகர் ஒருவர் கருத்து கூறியபோது, ஜெயலலிதா வழக்கு விஷயத்தில் உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி செயல்படுங்கள் என்று விஜய் கூறியதாகவும், அதனால் எங்கள் மனதிற்கு தோன்றிய கருத்தின்படி போஸ்டர் ஒட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் நேற்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்திருந்தால் விமான நிலையத்தில் இருந்து இந்த வழியாக வந்திருப்பார் என்றும் அப்போது இந்த போஸ்டரை அவர் பார்க்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் என்றும், ஆனால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் சோகத்துடன் கூறினார்.

Leave a Reply