இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கிளாடியேட்டர் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும் என டீசரை பார்த்து அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக பேசி வருகின்றனர். ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் கலவரமாக உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபாலி, மற்றும் குணசேகர் இயக்கிய ‘ருத்ரம்மாதேவி’ ஆகிய இரண்டு சரித்திர படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது. ஜூலை 10ஆம் தேதி பாகுபாலியும், ஆகஸ்ட் மாதம் ருத்ரம்மாதேவியும் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களும் கண்டிப்பாக சூப்பர்ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.
இதையடுத்து விஜய்யின் ‘புலி’ செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸாவதில்தான் தற்போது சிக்கல் என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த இரண்டு பிரமாண்ட படங்களுக்கு பின்னர் வெளியாகும் ‘புலி’ அதைவிட பிரமாண்டமாக இருந்தால்தான் பொதுமக்களிடையே எடுபடும். ஆனால் அது நடக்குமா? என்ற சந்தேகம் தற்போது விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு மலைகளுக்கு பின்னால் வரும் குன்றை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டது. இருப்பினும் விஜய்க்கு மாஸ் ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக ஓபனிங் சூப்பராக இருக்கும். ஆனால் அதற்கு பின்னர் படம் ஓடவெண்டுமானால், கண்டிப்பாக ருத்ரம்மாதேவி, பாகுபாலியை விட படம் பிரம்மாதமாக இருக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எனவே என்ன ஆகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.