தனுஷ் தந்தை கேரக்டரில் நடிக்கும் விஜய் தந்தை
இளையதளபதி விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனேகன் படத்தின் கதையை விஜய்க்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியபோது அந்த படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என பரிந்துரை செய்தது விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரது நட்பு வட்டாரம் மேலும் நெருங்கும் வகையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் முதல்முறையாக அண்ணன் – தம்பி என வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார். அண்ணன் கேரக்டருக்கு நடிகை ஷாம்லி ஜோடியாக நடிக்கும் நிலையில் தனுஷுக்கு அப்பாவாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தனுஷின் ஆஸ்தான் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளது.
தனுஷ் நடித்து முடித்துள்ள தங்கமகன், மற்றும் பிரபுசாலமன் படம் ஆகியவை போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளது. இந்த இரண்டு படங்களும் இவ்வருடத்திற்குள் ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.