சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் இதே ஆசை இருக்கின்றது. எனவேதான் ரஜினியை மையமாக வைத்து இதுநாள் வரை காயை நகர்த்தி வந்தது. ஆனால் ரஜினி இதுவரை எவ்வித பிடியும் கொடுக்காமல் பேசி வருவதால் பாஜவின் பார்வை தற்போது விஜய் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ள விஜய், அரசியலில் குதிக்க தகுந்த நேரத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில் தற்போது காலம் கனிந்து அரசியலில் குதிக்க சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவருடைய வட்டாரங்கள் அவருக்கு ஆலோசனை கூறி வருகின்றன.
கடந்த 1991ஆம் ஆண்டு ரஜினிக்கு வந்த நல்ல சந்தர்ப்பத்தை அவர் நழுவ விட்டதுபோல் விஜய் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று விஜய்க்கு அவருடைய நண்பர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். விஜய்க்கும் அரசியலில் குதிக்க ஆசையிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று அறிவிக்க பாஜக அறிவிக்க தயார் என்றால் அரசியலில் குதிக்க விஜய் தயார் என்று அவருடைய தரப்பில் இருந்து பாஜக மேலிடத்திற்கு செய்தி அனுப்ப தயாராகி வருகின்றனர். கத்தி திரைப்படம் ரிலீசானவுடன் விஜய் டெல்லி சென்று இதுகுறித்து பாஜக மேலிடத்தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.