இந்தியாவில் எனக்கு நியாயம் கிடைக்காது. விஜய் மல்லையா

இந்தியாவில் எனக்கு நியாயம் கிடைக்காது. விஜய் மல்லையா
vijay mallaiya
பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி வரை கடன் பெற்றுவிட்டு இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்து சென்றுவிட்ட விஜய் மல்லையா, லண்டனில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது தன்னை ஒரு கிரிமினலாக பார்க்கின்றனர் என்றும் வருத்தம் தெரிவித்ததோடு, இந்தியாவில் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெரியதொழில் ஆனாலும், சிறியதொழில் ஆனாலும் வியாபாரங்களில் சவால்களும், சரிவும் இருப்பது சகஜமானது என்பது மக்களுக்கு தெரியும். வங்கிகளும் இதை எல்லாம் தெரிந்தே கடன் தொகைகளை வழங்கியுள்ளன. சிறந்த நோக்கங்களை கொண்ட என்னை வில்லனாக சித்தரிக்காதீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை திரித்துவிடுவதைப்போல் என்னுடைய வார்த்தைகளும் திரித்து வெளியிடப்படலாம் என்பதற்காகவே நான் மவுனமாக இருக்கிறேன்.

நான் வெளிநாட்டுக்கு வருவது இது முதல்முறை அல்ல, ஆனால், ஊடகங்கள் என்னைப்பற்றிய பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. எப்போதுமே, வெளிப்படையான திறந்த புத்தகம்போல் வாழ்ந்துவந்த என்னை தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலைக்கு தள்ளியதற்காக வருத்தப்படுகிறேன்.

இந்தியாதான் எனக்கு தேவையான அனைத்தையும் தந்தது. என்னை விஜய் மல்லையாவாக மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வைத்தது. மற்றவர்களும் என்னைப்போல் வாழ நான் உதவி செய்துள்ளேன். அடிப்படையில் நான் ஒரு இந்தியன். நான் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லவே விரும்புகிறேன், ஆனால், எனது தரப்பை விளக்கிக்கூறும் நியாயமான வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply