விஜய்மல்லையா பாஸ்போர்ட் முடக்கம். இந்தியா கொண்டுவரப்படுவாரா?
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்கள் வாங்கிவிட்டு, வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறையினர் கூறியபோது கடனை திருப்பி செலுத்தும் பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் எனவே அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட வேண்டும் என்றும் கடந்த 13ஆம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கை ஏற்பட்டு தற்போது அவரது பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள ஐடிபிஐ வங்கியில், ரூ.900 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் மல்லையாவை விசாரணை செய்ய அவருக்கு 3 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் மல்லையா, கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருவதால் ஆஜராக முடியாது என்று காரணம் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள அவரை இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.