இந்தியாவுக்கு போக மாட்டேன். லண்டன் செய்தியாளர்களுக்கு விஜய் மல்லையா பேட்டி
இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அந்த கடனை கட்டாமல் இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுவிட்ட விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு தீவிரமாக உள்ளது. முதல்கட்டமாக அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன்’ என்று விஜய் மல்லையா லண்டனில் பேட்டி அளித்துள்ளார்.
லண்டன் செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா கூறியபோது, ‘இந்தியாவில் இன்று எனக்கு எதிராக நிலவும் சூழ்நிலையை எண்ணிப்பார்க்கும்போது, என்னைப் பற்றிய பொது அபிப்ராயத்தை உருவாக்குவதிலும், எனக்கு எதிராக இந்திய அரசை எரிச்சலடைய வைப்பதிலும் மின்ஊடகங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து நான் இந்தியாவுக்கு போக மாட்டேன். இங்கிருப்பது தான் எனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
எனது விமான நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகளுக்கு நியாயமான முறையில் நான் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த விரும்புகிறேன். ஆனால், எனது பாஸ்போர்ட்டை முடக்குவதாலோ, என்னை கைது செய்வதாலோ அவர்களுக்கு வேறெந்தப் பணமும் அவர்களுக்கு வந்துவிடப் போவதில்லை.
நான் நிச்சயமாக இந்தியாவுக்கு திரும்புவேன். ஆனால், தற்போது அங்கிருந்து எனக்கு எதிராக வேகமாகவும், ஆவேசமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்திய அரசு என்ன செய்யப் போகிறதோ என்று எனக்கு தெரியவில்லை.
என்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்ட வேகத்தை பார்க்கும்போது இதன் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றியும் இந்திய அரசின் உள்நோக்கத்தையும் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலையில் லண்டனில் இருந்து நான் இந்தியாவுக்கு போக மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.