இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை பிரபல அமெரிக்காவின் சர்வே நிறுவனம் போர்ப்ஸ் அதிரடியாக நீக்கியுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா ஆயிரக்கணக்கான கோடிகள் பணத்தை வங்கிகளிடம் கடன் வாங்கி அதை திருப்பி தராததால் இந்திய பணக்காரர் பட்டியலில் இருந்து அவரை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்தியாவின் 84-வது இடத்தில் இருந்த விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்து கடனில் சிக்கியதால் மல்லையா கடனை திருப்பி செலுத்த முடியாதவராக சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது சொத்து மதிப்பும் குறைந்ததாகவும் அதன் அடிப்படையில் அவர் பணக்காரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 17 வங்கிகளிடம் இருந்து வாங்கிய ரூ.7,600 கோடி வாங்கிய கடனை திருப்பி தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆண்டு மல்லையா உட்பட 11 பேர் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.