விஜய் மல்லையாவின் கட்டிடத்தை ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வராதது ஏன்? அதிர்ச்சி தகவல்
ஸ்டேட் வங்கி உள்பட இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளிலும் ரூ.9000 கோடி வரை கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, அந்த கடன்களை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திற்காக அவர் வாங்கிய கடனுக்காக மும்பையில் உள்ள கிங்பிஷர் இல்லத்தை ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கி நிறுவனம் கையகப்படுத்தி இருந்தது. 2,401.70 சதுர மீட்டர் கொண்ட அந்த கட்டிடம் நேற்று ஏலம் விடப்படும் என்று எஸ்பிஐ அறிவித்திருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.
இந்நிலையில் நேற்று இந்த கட்டிடம் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. சர்ஃபாசி சட்டத்தின்படி ஆன் லைன் மூலம் இந்த கட்டிடம் ஏலம் விடப்பட்டது. கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி என்றும், ஏல அடிப்படை மதிப்பு ரூ.150 கோடி எனவும் கூறியிருந்தது. ஏலத்துக்கான முன்வைப்பு தொகை ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஏல கேட்பு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கும் என்றும் இது தொடர்பான பொது அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த கட்டிடத்தை ஏலம் எடுக்க பல தொழிலதிபர்கள் குவிய வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்ததிற்கு மாறாக இந்த கட்டிடத்தை ஏலம் எடுக்க ஒருவர் கூட முன்வரவில்லை. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, “ஏலம் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. அடிப்படை விலை அதிகமாக இருப்பதால் யாரும் இதனை வாங்க முன்வரவில்லை என்று கருதுகிறோம்” என்று கூறினார். இதனால் ஏலத்தொகையை மாற்றி மீண்டும் ஒருநாளில் ஏலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.