விஜய்யின் ஆதரவு திமுகவுக்கா? ரசிகர் மன்ற தலைவர் விளக்கம்
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படம் சூப்பர் ஹிட் ஆனதும் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மறைமுகமாக திமுகவுக்கு ஆதர்வு அளித்துள்ளதாகவும், அவரது ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்து வருவதாகவும் வதந்திகள் கிளம்பின.
இந்நிலையில் இதுகுறித்து விஜய் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். இந்த தேர்தலை பொறுத்தவரை விஜய் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் திமுகவுக்கு ஆதரவாக விஜய் செயல்படுவதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் விஜய், அதிமுகவின் வெற்றிக்காக அணில் போல பாடுபட்டார். ஆனால் திமுக ஆட்சியை போலவே அதிமுக ஆட்சியிலும் அவருக்கு சோதனைகள் தொடரந்தன. குறிப்பாக ‘தலைவா’ படத்தின் ரிலிஸின்போது ‘Time to Lead’ என்ற ஒரு வார்த்தையை டைட்டிலில் இணைத்ததற்காக அந்தப் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு படம் வெளியாக தாமதம் ஆனது. இந்நிலையில் விஜய் தற்போதைய தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.