இளங்கோவன் – விஜயதரணி திடீர் மோதல். தமிழக காங்கிரஸில் பெரும் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை நீக்க வேண்டும் என ஏற்கனவே ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அண்மையில் டெல்லி சென்று சோனியா மற்றும் ராகுலை சந்தித்து வலியுறுத்தியுள்ள நிலையில் தற்போது தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணி இளங்கோவனுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் காங்கிரஸில் இன்னொரு கோஷ்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் மற்றும் விஜயதரணி ஆகியோர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் இளங்கோவன் விஜயதரணியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறாது.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், விஜயதரணி இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ” “இந்திரா காந்தி பிறந்தநாளுக்கு மகிளா காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்தனர். பேனர் கிழிக்கப்பட்டது பற்றி இளங்கோவனிடம் கேட்டபோது தகாத முறையில் என்னிடம் பேசினார். மேலும், கட்சியில் இருந்து வெளியேறுமாறும் கூறினார். பெண்களை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இளங்கோவன் இனியும் மாநில தலைவராக நீடிப்பது கட்சியை பாதிக்கும். என்னை அவதூறாக பேசிய இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் விளக்கம் கூறியபோது, “விஜயதாரணியை எப்போதும் அவதூறாக பேசியதில்லை என்றும், விஜயதாரணி எழுதியுள்ள கடிதம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ என்றும் கூறியுள்ளார்.