தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இரண்டாவது மகன் சண்முகப்பாண்டியனின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், ஓய்வின்றி இருந்ததாகவும், இரவு பகலாக படப்பிடிப்பு குறித்து ஆலோசனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிங்கப்பூரில் கண் அறுவை சிகிச்சை செய்துவிட்டு திரும்பிய விஜயகந்த், நேற்று ரயில்வே பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நிலையிலும் திடீரென பாதிப்பு அடைந்ததாகவும் அவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் மற்றும் வைகோ ஆகிய இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இரு கட்சி தொண்டர்களும் தங்கள் தலைவர்களின் நலன் விசாரிக்க அந்த மருத்துவமனையில் வாசலில் கூடியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.