உறுதியாகிறது திமுக-தேமுதிக கூட்டணி. 11ஆம் தேதி கருணாநிதி-விஜயகாந்த் சந்திப்பு?
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிகவின் நிலையை பொறுத்தே மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணி இறுதி செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த கட்சி எந்த கூட்டணிக்கு செல்லும் என்பது குறித்து கடந்த சில வாரங்களாக பரபரப்புடன் செய்திகள் வெளிவந்தன
மூன்றாவது பெரிய வாக்கு சதவீதத்தை வைத்திருப்பதாக கூறப்படும் தேமுதிகவை இழுக்க பாஜக, திமுக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய மூன்று அரசியல் கட்சிகளும் தீவிரமாக முயற்சி எடுத்து வந்த நிலையில் தற்போது திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், வரும் 11ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்திக்கவிருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதை உறுதிப்படுத்துவதுபோல் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி ‘பழம் கனிந்து கொண்டிருக்கின்றது. பாலில் எப்போது விழும் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
மேலும் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 25% இடம் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் தேமுதிகவுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆட்சியில் பங்கு குறித்து தேர்தல் முடிந்தவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.