தடையை மீறி மனித சங்கிலி போராட்டம் நடத்திய விஜயகாந்த், பிரேமலாதா உள்பட தேமுதிகவினர் கைது
மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட நூற்றுக்கணக்கான தேமுதிக கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க. சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் தடையை மீறி கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறியும் அதையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால், விஜயகாந்த் உள்பட அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விஜயகாந்த் மனைவி பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால், தே.மு.தி.க.வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த சில தே.மு.தி.க. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் தடுத்ததோடு, பிரேமலதா உள்பட போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்பட தேமுதிக தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.