ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் மீது ஈவு இரக்கம் இருந்தால் உடனே டாஸ்மாக்கை மூட வேண்டும். விஜயகாந்த்

vijayakanthகுழந்தைகள் மீதாவது ஈவு, இரக்கம் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா முடிவுகட்டுவாரா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் ஒட்டு மொத்த தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தை சீர்படுத்த முடியாத தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனக்கு பாராட்டு விழாக்களை நடத்துவதும், நன்றி சொல்ல வைப்பதுமென புளகாங்கிதம் அடைந்து கொண்டுள்ளார்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களுடைய பாலை பால் கூட்டுறவு சங்கங்கள் வாங்க மறுப்பதாகவும், அதனால் தினந்தோறும் ஐந்து லட்சம் லிட்டர் பால் வீணாவதாகவும், இப்பிரச்னை குறித்து இரண்டு மாதகாலமாக தொடர்ந்து போராடியும் அரசு துளியும் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

மதுவால் ஏற்படும் கொடுமைகள் மற்றும் குடும்பங்கள் சீரழிவது பற்றி கவலைப்படாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவினுடைய அதிமுக அரசே மது விற்பனை செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என தமிழ் சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளிவந்துள்ள வீடியோ காட்சியை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. ஆனால் அதிமுகவினரோ மது குடிக்கும் குழந்தை அழுததா? என மனிதாபிமானமே இல்லாமல் ஊடகத்தில் பேசுகிறார்கள். அப்படியானால் அராஜகமான முறையில் குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மது கொடுப்பதை ஆதரிக்கிறார்களா?

எவரேனும் எக்கேடுகெட்டும் போகட்டும், அதிமுக அரசுக்கும், மிடாஸ் ஆலைக்கும் வருமானம் வந்தால் போதும் என்ற மனநிலையா? தமிழகத்தில் மூன்று தலைமுறை மதுவால் கெட்டு குட்டிச்சுவராகியுள்ளது. இதை பார்த்த பிறகாவது தமிழக முதல்வர் ஜெயலலிதா, குழந்தைகள் மீதாவது ஈவு, இரக்கம் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டுவாரா? என தமிழக தாய்மார்கள் எதிர்பார்கிறார்கள்.

சமீபகாலமாக அரசு போக்குவரத்து கழகங்கள் ஆயில் நிறுவனங்களுக்கு உரிய பணம் வழங்காததால், அரசு பேருந்துகள் பல நடைகள் (TRIPS) இயக்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதை நிரூபிக்கும் வகையில் மதுரை புதூர் பணிமனையில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கபடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பல பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டு ரெக்கவரி வாகனம் மூலம் பணிமனைக்கு இழுத்துச்செல்லப்படும் காட்சியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நடுவழியில் அம்போவென தவிப்பிற்குள்ளாயினர். பேருந்தை இயக்கும்போதே அதில் டீசல் தேவையான அளவு உள்ளதா? பேருந்து பழுதின்றி உள்ளதா? என்பது போன்ற அடிப்படை விஷயங்களைகூட பார்க்காமலா பேருந்தை இயக்குவார்கள். இதுதான் போக்குவரத்து துறையின் திறமையான நிர்வாகமா?

தமிழக அரசின் நிர்வாகம் சீர்கெட்டுப்போயுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ? கடந்த திமுக ஆட்சியில் இதுபோன்ற பிரச்னைகளில் மெத்தனமாக இருந்ததாக திமுக அரசு மீது குற்றம்சாட்டிய அன்றைய எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா, இன்று தமிழக முதலமைச்சரான பின்பு இவற்றையெல்லாம் சீர்படுத்தினாரா?

இதை காணும்போது “நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள்” என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் மட்டுமல்ல நிர்வாகத்திறமை இல்லாததால் அனைத்து துறைகளும் ஸ்தம்பித்துப்போய் உள்ளது.

தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் எதை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல், தினந்தோறும் வெற்று அறிவிப்புகள் வெளியிட்டு, மக்களை ஏமாற்றாமல், இதுபோன்ற பிரச்னைகளில் உரிய நடவடிக்கை எடுத்து நிர்வாகத்தை சீர்படுத்தவேண்டும்” என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply