வெள்ள பாதிப்பை பார்வையிட்டபோது பளாரென் எம்.எல்.ஏவை அடித்த விஜயகாந்த். வீடியோ இணைப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே தனது கட்சியின் வேட்பாளர் ஒருவரை பொதுமக்களின் முன்னிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று வெள்ள பாதிப்பை பார்வையிட கடலூர் மாவட்டம் சென்ற விஜயகாந்த் தனக்கு அருகில் நின்றிருந்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்துவை திடீரென அடித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் விஜயகாந்த். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதல்வர் ஏன் பார்வையிடவில்லை என்றும் வீராணம் ஏரியை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட 40 கோடி ரூபாய் என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பினார்.
பின்னர் பண்ருட்டி காட்டுப்பாளையம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட போது, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்துவை, விஜயகாந்த் திடீரென பளார் பளார் என அடித்தார். அந்த காட்சி, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அவர் ஏன் எம்.எல்.ஏவை அடித்தார் என்பது தெரியவில்லை.
English Summary: Vijayakanth beat Panruti MLA Sivakozhundh