தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு தயாராகி வருகிறது. அதிமுகவை தவிர மற்ற அனைத்து கூட்டணிகளும் தேமுதிகவை இழுக்க முயற்சித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும், அங்கு அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த் தகவல் தங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நினைத்து கொண்டிருந்த திமுக, மற்றும் மக்கள் நலக்கூட்டணிக்கு அதிர்ச்சியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் திமுகவை பயமுறுத்தி தான் விரும்பும் எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறுவதற்காக விஜயகாந்த் டெல்லி செல்லவுள்ளதாகவும், கண்டிப்பாக பாஜக கூட்டணியில் தேமுதிக சேர வாய்ப்பில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. திமுகவுக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக விஜயகாந்த் நடவடிக்கையை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.