போர்க்கொடி தூக்கிய 5 தேமுதிக எம்.எல்.ஏக்கள் நீக்கம். விஜயகாந்த் அதிரடி
திமுகவுடன் கூட்டணிக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, எதிர்பார்த்த பேரம் படியாததால் திடீரென மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததாக தேமுதிக அறிவித்த நொடியில் இருந்தே, அந்த கட்சியை உடைக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. தற்போது அது கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத விஜயகாந்த், போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகியவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் விஜயகாந்த்.
இது குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், துணை செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம், (மாவட்ட கழக அவைத் தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்எல்ஏ, வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச் செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.