பாமக கட்சிக்கு புதுச்சேரியில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவிருந்த விஜயகாந்த், திடீரென புதுச்சேரி பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் தேமுதிக மற்றும் பாமகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவும், தேமுதிகவும் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு கொண்டு இருக்கின்றன. பாமக தொண்டர்கள் தேமுதிக நிற்கும் தொகுதிகளான சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் வேலை செய்யவில்லை என்று விஜயகாந்திற்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் நிற்கும் சேலம் தொகுதியில் தேமுதிகவுக்கு எதிராக பாமக பிரமுகர் அருள் வேலை செய்வதாக வந்த தகவலை அடுத்து விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பாரதிய ஜனதா இதுகுறித்து பாமகவிற்கு எச்சரிக்கை விடுத்தும் பாமக அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த விஜயகாந்த், திடீரென தன்னுடைய திட்டத்தை மாற்றிக்கொண்டு சென்னைக்கு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டார். பாரதிய ஜனதா மற்றும் மதிமுக நிற்கும் தொகுதிகளிலும் பாமகவினர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு 3 தொகுதிகள்தான் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறிவரும் நிலையில் கூட்டணிக்கட்சிகளில் ஒற்றுமையின்மையால் அதுவும் இல்லாமல் போய்விடும் என தொண்டர்கள் கவலையடைந்து உள்ளனர்.