பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்த் அநாகரீகம். கடும் அதிருப்தி
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கிட்டத்தட்ட கூட்டணி இல்லாமல் போட்டியிடும் நிலையில் உள்ளது. திமுகவில் எந்த கட்சியும் கூட்டணி வைக்க விரும்பாமல் ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் பாஜகவும், மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவை வளைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பாஜக ஒருபடி மேலே போய் தேமுதிக தங்கள் கூட்டணியில்தான் இருப்பதாகவும் கூறிவருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”தே.மு.தி.க. எந்த கூட்டணியிலும் இல்லை. தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். உங்களை எல்லாம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். கூட்டணிக்கு வருமாறு அழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில் விஜயகாந்திடம், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்குமா? பிடிக்காதா என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், ”ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது போதுமா… 2016-ல் அ.தி.மு.க., ஜெயலலிதா அட்சியை பிடிக்குமா…? இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? கேக்கவே மாட்டீங்களே, பயப்புடுவீங்க…. பத்திரிகைகாரங்களா நீங்க த்தூ… என்று துப்பி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
விஜயகாந்தின் இந்த செய்கை ஒட்டுமொத்த செய்தியாளர் சமூகத்தையும் அவமதிக்கும் விதமாக இருந்ததாக பத்திரிகையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பேட்டியின்போது த்தூ.. என்று துப்பி, தன்நிலை மறந்து விஜயகாந்த் மிகவும் அநாகரிகமாக நடந்துக் கொண்டது விஜயகாந்தின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்துள்ளது.