அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒரே நாளில் சந்தித்த விஜயகாந்த். இன்று பிரதமருடன் சந்திப்பு

vijayakanthமேகேதாட்டுவில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவது, நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் சந்திக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னர் அனைத்து கட்சி பிரமுகர்களையும் அழைத்து செல்ல நேற்று ஒரே நாளில் விஜயகாந்த் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில்  கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்ற விஜயகாந்த், அவருடன் சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்களூம் உடனிருந்தனர்.   கோபாலபுரத்தில் இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனை சந்தித்துப் பேசினார். அவருடன் இருந்த காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், குஷ்பு ஆகியோரையும் விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து நேராக தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்ற விஜயகாந்த், அங்கு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஆகியோர்களையும் சந்தித்து பேசி பிரதமரை சந்திக்க செல்லும்போது பாஜக நிர்வாகிகளும் உடன் வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதன்பின்னர் அசோக் நகரில் உள்ள விடு தலைச் சிறுத்தைகள் கட்சி அலு வலகத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனையும் விஜயகாந்த் சந்தித்து பிரதமரை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர்களை விஜயகாந்த் சந்திக்க சென்றபோது அவருடன் தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி எம்எல்ஏ ஆகியோர் விஜயகாந்த் உடன் இருந்தனர். பின்னர், கடைசியாக விஜயகாந்த் நேற்று மாலை மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் சென்று அங்கு வைகோவுடன் பேசினார். அவருக்கும் டெல்லி வர அழைப்புவிடுத்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுடன் விஜயகாந்த் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்தார். ஆனால் தனக்கு இன்று வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் தன்னால் வர இயலாது என்று ராமகிருஷ்ணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply