விஜயகாந்த்-சுப்பிரமணியம் சுவாமி திடீர் சந்திப்பு. கூட்டணி பேச்சுவார்த்தையா?

விஜயகாந்த்-சுப்பிரமணியம் சுவாமி திடீர் சந்திப்பு. கூட்டணி பேச்சுவார்த்தையா?
vijayakanth
இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க இப்போதே தங்களது ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டது. வலிமையான அதிமுகவை எதிர்க்க கண்டிப்பாக பலம் வாய்ந்த கூட்டணி தேவை என்பதை புரிந்து கொண்ட திமுகவின் தலைமை காங்கிரஸ், தேமுதிக மற்றும் இடது சாரிகளின் துணையோடு புதிய வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறது. ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸும் கிட்டதட்ட 100க்கும் அதிகமான தொகுதிகளை தேமுதிகவும் கேட்கும் நிலையில் நேற்று திடீரென பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ” தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதும் என் மீதும் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் இருவரும் தனித்தனியே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். வருகிற 7 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது. அதில் உள்ள கிரிமினல் வழக்குகளை நீக்குவது குறித்து பேசினோம். தமிழக அரசு எங்கள் மீது தொடர்ந்த வழக்குகளை கூட்டாக சேர்த்து எதிர் கொள்ளலாமா? என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தோம்.

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக முதல்வர்–பிரதமர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சோனியா காந்தியை அதுபோல பேசி இருந்தால் இவர் ஏற்றுக் கொள்வாரா? மோடி எனது 40 ஆண்டு கால நண்பர் அவரை பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல்கள்  அமோகமாக நடந்து வருகின்றன . எனவே, தமிழகத்தில் மூன்றாவது சக்தியைத் தான் மக்கள் ஏற்பார்கள். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும். ஜெயலலிதா மேல் முறையிட்டு வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு தான் வரும்.

பாஜக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி அமைக்க முயற்சி செய்து இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேட்கப்படுகிறது. கூட்டணிகள் குறித்து பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கண்டிப்பாக அவதூறு வழக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக மட்டும் இருக்காது என்பதே பலரது கருத்தாக உள்ளது. கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேமுதிக கூட்டணி குறித்தே இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply