கருணாநிதியுடன் விஜயகாந்த் சந்திப்பு காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க. தலைவர்களையும் சந்தித்து பேசினார்

201504270049075728_Vijayakanth-meeting-with-Karunanidhi_SECVPF

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

இது போல காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., த.மா.கா., தலைவர்களையும் விஜயகாந்த் சந்தித்தார்.

அரசியல் பரபரப்பு

மேகதாது, ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விஜயகாந்த் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேச உள்ளார். இதையொட்டி அவர் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களை நேற்று திடீரென்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக இந்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும் நிலையில், விஜயகாந்த் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச இருப்பது புதிய அரசியல் கூட்டணிக்கு வழி வகுக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஏற்பட்டது.

விஜயகாந்தை வரவேற்ற மு.க.ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் ஏராளமான பத்திரிகை நிருபர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. காலை 10.55 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவதற்காக வந்தார். அவருடன் தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் வந்தனர்.

அவர்களை மு.க.ஸ்டாலின் வாசலில் நின்று வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார். பின்னர் மு.க.ஸ்டாலினுடன், விஜயகாந்த் சுமார் 10 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்.

கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார்

பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் வீட்டின் மேல்மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்த், கருணாநிதியிடம் உடல் நிலை குறித்து விசாரித்துக்கொண்டார். பதிலுக்கு கருணாநிதியும், விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் அவர்கள் இருவரும் சிறிது நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, விஜயகாந்த், மேகதாது சம்பந்தமாக பிரதமரை தான் சந்திக்க செல்லும் போது தி.மு.க. சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பதிலுக்கு கருணாநிதி, கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்றும் மக்கள் பிரச்சினையில் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘விஜயகாந்த் தி.மு.க.விடம் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா? தி.மு.க. சார்பில் எம்.பி.க்கள் விஜயகாந்துடன் செல்வார்களா?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ‘விஜயகாந்த், பிரதமரை சந்திக்கின்ற நிகழ்வில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உடன் செல்வார்கள்’ என்றார்.

இளங்கோவனுடன் சந்திப்பு

கருணாநிதியை சந்தித்த பிறகு விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவனை சந்தித்து பேசுவதற்காக பகல் 11.45 மணிக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.

அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்தநாள் பற்றி ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அந்த கூட்டத்திற்கு சென்ற விஜயகாந்த், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை ஒரு நிமிடம் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் விஜயகாந்த், சுமார் 20 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் 12.10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் இருந்து விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.

பா.ஜ.க. வரவேற்பு

சத்தியமூர்த்தி பவனில் இருந்து புறப்பட்ட விஜயகாந்த், தமிழக பா.ஜ.க.வின் ஆதரவை கேட்பதற்காக சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மதியம் 12.19 மணியளவில் வந்தார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு, இளைஞர் அணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட மாநில நிர்வாகிகள் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.

பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், விஜயகாந்தும் சுமார் 17 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மதியம் 12.36 மணியளவில் விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.

ஜி.கே.வாசன்

பின்னர் விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவை பெறுவதற்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு மதியம் 12.45 மணியளவில் வந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்து சென்றார். கட்சி அலுவலகத்துக்குள்ளே விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.

திருமாவளவனுடன் சந்திப்பு

ஜி.கே.வாசனுடனான சந்திப்புக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக மதியம் 1.35 மணியளவில் அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், கொள்கைப்பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தனி செயலாளர் இளஞ்சேகுவரா உள்பட மாநில நிர்வாகிகள் வாசலுக்கு வந்து வரவேற்று கட்சி அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.

பின்னர் விஜயகாந்தும், தொல்.திருமாவளவனும், சுமார் 20 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து மதியம் 2.15 மணி அளவில் விஜயகாந்த அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வைகோ சந்திப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்திற்கு நேற்று மாலை 4.10 மணிக்கு வந்தார். மாலை 4.15 மணி முதல் 4.40 மணி வரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்தித்து பேசினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைக்கோ நிருபர்களிடம் கூறும்போது, ‘மேகதாது விஷயத்தில், மத்திய அரசும், பிரதமரும் நியாயமாக நடக்கவில்லை. கர்நாடக அரசு அணையை கட்டியே தீருவோம் என்று கூறுகிறது. இப்போது விஜயகாந்த் எடுக்கும் நடவடிக்கைக்கு பிறகாவது நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். பிரதமரை சந்திப்பதற்கு ம.தி.மு.க. சார்பில் கட்சியின் ஆட்சிமன்ற குழு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி செல்வார்’ என்றார்.

விஜயகாந்துடன், தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட தலைவர் வி.என்.ராஜன் உள்பட நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

டெல்லியில் பிரதமரை சந்திக்கும்போது தங்கள் கட்சி சார்பில் பிரதிநிதியை அனுப்புவதாக காங்கிரஸ், பா.ஜனதா, த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் சார்பில் விஜயகாந்திடம் தெரிவித்துள்ளனர்.

ராமதாசை சந்திக்கவில்லை

டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தருமாறு, பா.ம.க. முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்த் தரப்பில் நேற்று கேட்கப்பட்டது.

ஆனால் இதற்கு அவர்கள், டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திண்டிவனத்தில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக விஜயகாந்த் தரப்பிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் சந்திப்பு நடைபெறவில்லை.

Leave a Reply