விஜயகாந்த் படத்தில் வில்லன்களை புரட்டியெடுப்பது போல நிஜத்தில் சில சமயங்களில் தனது ரசிகர்கள் அல்லது கட்சிக்காரர்களை பொது இடத்தில் அடித்து சர்ச்சையில் சிக்குவார். தனது கட்சியின் வேட்பாளரை தேர்தல் பிரச்சாரத்தின்போது அடித்து ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்திற்கு லொகேஷன் பார்க்க விஜயகாந்த் தனது மனைவியுடன் மலேசியா சென்றுள்ளார். அப்போது விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டலில் அவரை பார்க்க ரசிகர்கள் வந்திருந்தனர். அதில் ஷாஜகான் என்ற ரசிகர் மீண்டும் மீண்டும் விஜயகாந்துடன் நின்று பலவித போஸ்களில் புகைப்படம் எடுத்ததால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
பொது இடத்தில் ரசிகர்களிடமும், கட்சிக்காரர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற இங்கிதம் தெரியாத விஜயகாந்த், ஒரு கட்சியின் தலைவராக இருக்க தகுதியில்லாதவர் என சமூகவலைத்தளங்களில் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.