ஏட்டிக்கு போட்டியாக செயல்படுகிறது அதிமுக அரசு . விஜயகாந்த்

vijayakanthதமிழகத்தில் மதுக்கடைகளை மூட அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிர போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், ஏட்டிக்கு போட்டியாக சகல வசதிகளுடன் கூடிய “எலைட்” மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

‘தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் ஒருமித்தகுரல் கொடுத்தும், “செவிடன் காதில் ஊதிய சங்காக” அதிமுக அரசு இருக்கிறது. மதுக்கடைகளை மூடக்கோரினால் “ஏட்டிக்குப் போட்டியாக”, சகல வசதிகளுடன் கூடிய “எலைட்” மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பதும், மது விற்பனையை மேலும் அதிகரிக்க உயர் அதிகாரிகளை கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்துவதும் என்ன நியாயம்? சுமார் ஆயிரத்து முந்நூறு அரசுபள்ளிகளை மூடுவதாக செய்திகள் வருகின்றன. அதிமுக அரசு அதை தொடர்ந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல், மதுவினால் சீரழிந்துகொண்டுள்ள தமிழகத்தை, மேலும் சீரழிக்க முயற்சிக்கலாமா?
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, உயர்அதிகாரிகளைக்கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்தி, குடிநீர் தேவையை சமாளிக்க உரியநடவடிக்கையை தமிழக அரசு ஏன் எடுக்கவில்லையென பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மதுவியாபாரத்தை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, இந்த அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சனையில் காட்டியிருக்கலாம் அல்லவா?

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 60 கோடி ரூபாய் செலவாகுமென்றும், மாதம் 20 லட்சம் ரூபாய் நடைமுறை செலவாகுமென்றும், சட்டமன்ற நிகழ்சிகள் 80 சதவிகிதம் தற்போது ஒளிபரப்பப்படுகிறது என்றும் மாபெரும் பொய்யை தமிழக அரசு கூறியுள்ளது. சில லட்சங்களை செலவு செய்தாலே நேரடிஒளிபரப்பு செய்யமுடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற செயல்பாடுகளையோ, ஆற்றுகின்ற உரைகளின் முழுத்தொகுப்பையோ ஒளிபரப்பியதே இல்லை. அதேசமயத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களினுடைய பேச்சுக்கள் மட்டுமே முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த உண்மைகளை மறைத்து உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக அரசு கூறியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் முதல் பாமரமக்கள் வரை பேசுகிறார்கள்.

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய ஆறுபேரும் இரண்டு கூட்டத்தொடரில் கலந்துகொள்ளக்கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பேரவை தலைவரும், செயலாளரும் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற நீதியரசர்களை நம்பித்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை துவக்கி, அதை முடித்துவைக்கும் காலம் வரையிலும் என்பதுதான் ஒரு கூட்டத்தொடராகும். அதன்படி இரண்டு கூட்டத்தொடர் முழுவதும் ஆறுபேர் இடைநீக்கம் என்பது 2016ஆம் ஆண்டு பிப்ரவரிவரை சுமார் 11 மாதங்கள் அவர்கள் எம்.எல்.ஏவாக தொடரமுடியாத நிலையும், எதிர்வரும் மானிய கோரிக்கை விவாதத்தில்கூட மற்ற தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்க முடியாத வகையிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிஅரசர்களை மட்டுமே நம்பவேண்டிய நிலையில் தேமுதிக உள்ளது.  

வேளாண்துறையின் உதவி செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி  தற்கொலையால், பதவியை இழந்து சிறை சென்ற முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளரராக பணிபுரிந்த ரவிகுமார் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது பிரேத பரிசோதனை அவசர அவசரமாக செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தவேண்டும். “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொரு பிரச்சனையிலும் மக்களை பற்றி சிந்திக்காமல், சுயநல நோக்கோடு, அரசியல் இலாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply