சென்னையில் மெட்ரோஇரயில் திட்டம் துவங்கப்பட்டபோது அனைத்து தரப்பினரும் முழுமனதோடு அதை வரவேற்றார்கள். ஆனால் அந்த திட்டத்தை சட்டமன்றத்தில் நிராகரித்து பேசிவிட்டு, அதிமுக ஆட்சியில் நான்தான் கொண்டுவந்தேன் என்று தற்போது சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும், அதற்கு உரிமை கொண்டாடியும் “அள்ளித்தெளித்த அவசரகோலத்தில்” இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தாரோ என்ற ஐயம் மக்களுக்கு எழுகிறது.
ஏனென்றால் மின்கசிவால் உடல்கருகி மெட்ரோஊழியர் உயிருக்கு போராடுவதும், தண்டவாளம் விழுந்து கார்நொறுங்கிப்போவதும், இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பதும் என தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த சிலநாட்களாக பெய்த மழையில் மெட்ரோ இரயில் பாதைகளில் மழைநீர்தேங்கி, அதனால் சில இடங்களில் இரயில் பாதைகள் கீழே இறங்கியுள்ளதாகவும், பல இடங்களில் மின்கம்பிகளில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், கண்ட்ரோல்ரூம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் உட்புகுந்து சேதம் ஏற்பட்டதாகவும், அதனால் மெட்ரோ இரயில் போக்குவரத்து பலமணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதனால் மெட்ரோ இரயிலில் பயணம்செய்ய பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் மெட்ரோ இரயில் பணியால் பல பாதிப்புகள் ஏற்படுவதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக சுரங்க இரயில்பாதை அமைக்கப்படும் வழித்தடங்களில் உள்ள கட்டிடங்கள் திடீர் திடீரென பூமிக்குள் இறங்குவதும், விரிசல்கள் ஏற்பட்டு இடிந்தும் விழுகின்றன. மேலும் சென்னையிலுள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் மோசமான சாலைக்குகீழே மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறுவதால் சாலைகளில் விரிசல்களும், பள்ளங்களும் ஏற்பட்டு வாகனங்கள் விபத்திற்குள்ளாவதும், நடந்துசெல்வதற்கே முடியாத நிலையும் என பல்வேறு இடர்பாடுகளை பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள்.
எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு ஆதாயமென்றால் அதற்கு உரிமைகொண்டாடுவதும், பாதிப்பு என்றால் அடுத்தவர்மீது பழியை போடுவதும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கைவந்தகலை. எனவே அதிமுக அரசு மெட்ரோ இரயில் திட்டத்தை மேம்படுத்தி, ஆமை வேகத்தில் செல்கின்ற மெட்ரோ இரயில் பணியில் சிறப்பு கவனம் செலுத்தி, அதை எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு விரைவு படுத்தியும் எவ்வித விபத்துகளும் நேராதவண்ணம் செயல்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.