தமிழகத்தில் மின்வெட்டே இல்லாதது போலும், தமிழகம் ஒளிர்வது போலவும் வாய்ச்சொல்லில் வீரம் காட்டும் தமிழக முதல்வர், மின்வாரியத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் ஊழல் குறித்த உண்மை நிலவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மின்தேவை முற்றிலும் பூர்த்தி செய்யப்பட்டது போலவும், மின்வெட்டே இல்லாமல் தமிழகம் ஒளிர்கிறது என்று வாய்ச்சொல்லில் வீரம் காட்டுகிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் துவங்கி, எத்தனை மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதென பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.
2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்டம்–2023ல், பத்து ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும், தமிழக அரசின் சூரிய ஒளி மின்கொள்கையை வெளியிட்டபோது, ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென கூறி மூன்றாண்டுகள் முடிவுற்றும் முதல்கட்ட பணிகள்கூட நடைபெறவில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய நேரடி கண்காணிப்பில் உடன்குடி அனல்மின்திட்டமும், சில்லஹல்லா நீர்மின்திட்டமும் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு என்னவானது? அரசின் பலமான எதிர்பார்ப்புகளால், அதனால் ஏற்பட்ட பல்வேறு குளறுபடியால் உடன்குடி அனல்மின்திட்டம் கிணற்றில்போட்ட கல்லாகிவிட்டது. 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் 9 புதிய அனல்மின் திட்டங்கள், சுமார் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தெரிவித்தது என்னவானது?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ மின்வெட்டே இல்லாமல் தமிழகம் ஒளிர்கிறது என்கிற புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். சென்னையில் சுட்டெரிக்கும் வெய்யில் வாட்டும் நிலையில், பல நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் (LOW VOLTAGE) காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 6 மணி நேரம்வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து இருந்து வருகிறது என மக்கள் கூறுகிறார்கள். மின்உற்பத்தி நிலையங்களில் தமிழக தேவைக்கு போதுமான அளவு மின்உற்பத்தி செய்யப்படவில்லை என்று தமிழக மின்வாரியம் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2003ஆம் ஆண்டு முதல் 2014வரை உள்ள பத்தாண்டு காலத்தில் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில், ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் உயர்நீதிமன்ற நீதியரசர், சி.ஏ.ஜி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தான் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பார்களோ? தமிழக மக்களின் தேவைக்காக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினார்களா? இல்லை தங்களின் தேவையை பூர்த்தி செய்ய வாங்கினார்களா? கடந்த ஆட்சியில் அதிக விலைகொடுத்து வாங்கியதை குறைத்து, ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 5.50க்கு வாங்குவதாக 2012ல் சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 12.50க்கு வாங்குவதை ஊழல் என்று சொல்வதா? மெகா ஊழல் என சொல்வதா? அதிமுகவிற்கு ஐந்தாண்டுக்குதான் ஆட்சிசெய்ய மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க பதினைந்தாண்டு காலத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது சரியா? இன்னும் பதினைந்தாண்டு காலத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட புதிய மின்திட்டங்கள் எதுவுமே செயல்பாட்டிற்கு வராது என்பதையே இது மறைமுகமாக காட்டுகிறது.
தமிழக மின்வாரியத்தில் உயர்பதவியில் இருந்த குறிப்பிட்ட அதிகாரியால் கடந்த பத்தாண்டுகாலமாக மின்உற்பத்தி திட்டங்கள், திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதாகவும், அதையே காரணமாக்கி தனியாரிடம் அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கியதால்தான், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, தமிழக மின்வாரியம் கடனில் சிக்கித்தவிப்பதாக பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. சி.ஏ.ஜி அறிக்கையில் கூட மின் உற்பத்தி திட்டங்கள் தாமதமானதால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளதாவே தெரிகிறது. எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்த உண்மை நிலவரங்களை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மீதும், அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.