சட்டசபையில் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் விவகாரம். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது, தேமுதிக கட்சியின் எம்.எல்.ஏக்கள் வரம்புமீறி நடந்து கொண்டதாக கு?ற்றம் சாட்டப்பட்டு, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகியோர், இரண்டு கூட்டத் தொடரில் பங்கேற்கக்கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடைநீக்கத்தை எதிர்த்து இவர்கள் 6 எம்.எல்.ஏக்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விசாரணை செய்த நீதிபதி, இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் செயலாளர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ”தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய ஆறுபேரும் இரண்டு கூட்டத்தொடரில் கலந்துகொள்ளக்கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பேரவை தலைவரும், செயலாளரும் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுபோன்ற நீதியரசர்களை நம்பித்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை துவக்கி, அதை முடித்துவைக்கும் காலம் வரையிலும் என்பதுதான் ஒரு கூட்டத்தொடராகும். அதன்படி இரண்டு கூட்டத்தொடர் முழுவதும் ஆறுபேர் இடைநீக்கம் என்பது 2016ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சுமார் 11 மாதங்கள் அவர்கள் எம்.எல்.ஏ.வாக தொடரமுடியாத நிலையும், எதிர்வரும் மானிய கோரிக்கை விவாதத்தில்கூட மற்ற தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்க முடியாத வகையிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிஅரசர்களை மட்டுமே நம்பவேண்டிய நிலையில் தே.மு.தி.க உள்ளது”
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.