விஜயதாரிணிக்கு மீண்டும் பதவி. ராகுல் காந்தி அதிரடியால் இளங்கோவன் -குஷ்பு அதிருப்தியா?
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த விஜயதாரணி அந்த பதவியில் இருந்து தூக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விஜயதாரிணிக்கு காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸின் இந்திய பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த முறையான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் பதவியை இழந்த விஜயதாரிணி, முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் சேருவார் என்ற வதந்தி முதலில் எழுந்தது. ஆனால் விஜயதாரிணி டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்து கூறியதாகவும், அவரது தரப்பு நியாயத்தை புரிந்து கொண்ட காங்கிரஸ் தலைமை அவருக்கு மீண்டும் பொறுப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறாது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் மகளிர் காங்கிரஸ் பிரிவின் பொறுப்பாளரான ராகுல் காந்தி, மகிளா காங்கிரஸ் பிரிவின் அகில இந்திய பொதுச் செயலாளராக விஜயதாரணியை உடனடியாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் துவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜயதாரிணியின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜயதாரிணிக்கு எதிராக இளங்கோவன் மற்றும் குஷ்பு காய் நகர்த்தி வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த நியமனம் இருவருக்குமே பின்னடைவுதான் என காங்கிரஸ் வடாரங்கள் கூறுகின்றன.