விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் “கத்தி” திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை திடீரென இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நிறுத்தி வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தின் கதையும், ஜீவா நடித்துக்கொண்டிருக்கும் ‘யான்’ திரைப்படத்தின் கதையும் ஒன்றுதான் என்பதுதான் ஏ.ஆர்.முருகதாஸின் திடீர் முடிவுக்கு காரணம். வில்லன் விஜய் 90 பணயக்கைதிகளை பிடித்துக்கொண்டு ஹீரோ விஜய்க்கு சவால் விடுகிறார். வில்லன் விஜய்யிடம் இருந்து பணயக்கைதிகளை எப்படி ஹீரோ விஜய் மீட்டுவருகிறார் என்பதுதான் கதை.
இதேபோல் யான் படத்திலும் ஜீவா பணயக்கைதிகளை மீட்கும் கேரக்டரில்தான் நடித்துள்ளார். இரண்டு படங்களில் வரும் சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால் யான் திரைப்படத்தின் இயக்குனர் ரவி.கே.சந்திரனும், கத்தி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே இந்த இரண்டு படங்களில் எந்த படம் முதலில் வருகிறதோ அந்த படம் தப்பித்துக்கொள்ளும். தாமதமாக வரும் படம் பிளாப் ஆக வாய்ப்பு உள்ளது. ‘கத்தி’ படம் தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் யான் திரைப்படம் வரும் ஆகஸ்ட்டில் வெளியாக இருப்பதால் விஜய் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.
ஏற்கனவே லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருவதால் பிரச்சனையில் சிக்கியுள்ள கத்தி, தற்போது கதை பிரச்சனையிலும் சிக்கியிருப்பதால் கத்தி குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து முருகதாஸிடம் கேட்டபோது, இரு படங்களின் கதை வேறுவேறு என்பதை நாங்கள் உறுதிசெய்துவிட்டோம். இந்த வதந்தி தேவையில்லாதது என்று கூறியுள்ளார்.