உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளதா? ரயில்வே துறை அறிவித்திருக்கும் சிறப்பு சலுகை
ஒரு குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முன்பதிவு செய்யும்போது அவருக்குரிய டிக்கெட் இல்லாத நேரத்தில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார். அவ்வாறு இருப்போருக்கு ஒருவேளை டிக்கெட் கிடைக்காவிட்டால் பணம் திரும்ப கிடைத்துவிடும். ஆனால் அவர் பயணம் செய்ய முடியாது. இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அடுத்த ரயிலில் முன்னுரிமை வழங்கும் விகல்ப் திட்டம் என்னும் புதிய திட்டத்தை ஒருசில வழித்தடங்களில் மட்டும் கடந்த ஆண்டு ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த திட்டம் தற்போது மேலும் சில ரயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விகப்ல் திட்டம் என்ற பெயரை ரயில்வே துறை வைத்துள்ளது.
டெல்லி-ஜம்மு மற்றும் டெல்லி-லக்னோ ஆகிய வழித்தடத்தில் மட்டுமே இதுவரை செயல்படுத்தப்பட்ட இந்த விகல்ப் திட்டம் தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை, டெல்லி-சென்னை, டெல்லி-பெங்களூரு மற்றும் டெல்லி-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
விகல்ப் திட்டம் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. விகல்ப் திட்டத்தின் கீழ் மாற்று ரயிலில் ஒதுக்கீடு பெற்ற பயணிகள், பயணத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல், வித்தியாச கட்டணத் தொகை திருப்பித் தரப்படவும் மாட்டாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.