‎போகர்‬-கண்ட-விநாயகரின் சமாதி

12313789_915450961881557_8680497878310043760_n

பிள்ளையார் ஆதியில் காணாபத்யம் என்கிற
பிரிவின் முழு முதற்கடவுளாய் விளங்கியவர்,
பின்னாளில் ஷண்மதங்களும் ஒரே குடையின்
கீழ் இந்து மதமாய் மலர்ந்த போது இந்து
மதத்தின் முழு முதற்கடவுளான
சிறப்புடையவர். இந்து மதத்தைச்
சேர்ந்தவர்கள் எந்த ஒரு செயலையும்
விநாயகரை முன்னிறுத்தி அவரை பணிந்தே
துவங்குகின்றனர். சித்தர் பெருமக்கள்
விநாயகரை எவ்வாறு போற்றித் துதித்தனர்
என்பது பற்றிய விவரங்களை இங்கே
தொகுத்திருக்கிறேன்.
இன்றைய பதிவில் விநாயகரின் சமாதி பற்றிய
ஒரு தகவலை பார்க்க இருக்கிறோம்.

ஆம்!, முழு
முதற்கடவுளான விநாயகரின் சமாதியேதான்,
போகர் தனது “போகர் 7000” ம் என்ற நூலில்
இந்த விவரங்களை பகிர்ந்திருக்கிறார். எங்கே
என துல்லியமாய் விவரம் கேட்பவர்கள் பாடல்
எண் 4900 முதல் 4910 வரையிலான
பாடல்களை பார்த்து தெளியலாம்.

பதிவின் நீளம் கருதி போகர் விநாயகரின்
சமாதியை தரிசித்த காட்சியை விவரிக்கும்
நான்கு பாடல்களை மட்டும் இங்கே
பகிர்கிறேன்.

தந்தாரே இன்னமொரு மார்க்கம்சொல்வேன்
தயவான புலிப்பாணி மைந்தா கேளு
சொந்தமுடன் அடியேனும் குளிகைகொண்டு
துப்புரவாய் மேருகிரி தன்னில்சென்றேன்
அந்தமுடன் பதின்மூன்றாம் வரையில்சென்று
அவ்வரையில் விநாயகரைக் காணேன்று
விந்தையுடன் அடியேனும் மனதூவந்து
விருப்பமுடன் குளிகைகொண்டு
சென்றேந்தானே.

தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர்
தண்மையுடன் குருதனையே
நினைந்துகொண்டு
தேனான பதின்மூன்றாம் வரையில்சென்றேன்
தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண
கோனான தும்பிக்கையுடைய மாண்பன்
கொற்றவனாம் கணபதியாம் என்றசித்து
மானான மகதேவகன் என்னுஞ்சித்து மகத்தான
சமாதிபதி கண்டிட்டேனே.

காணவே விநாயகரின் சமாதிகண்டேன் கருவான
சமாதியது மூடவில்லை பூணவே
அங்குசமும் ஒத்தைக்கொம்பும் புகழான
யானைமுகம் சமாதிபூண்டு ஊணவே
பூமிதனில் சமாதிபூண்டு உறுதியுடன்
இருகரமும் ஏந்திக்கொண்டு மாணவே
வெகுகாலம் இருந்தசித்து மகத்தான
மூன்றுயுகம் கண்டசித்தன்.

சித்தான சித்துமுனி விநாயகந்தான் சிறப்பான
மேருகிரி தன்னிலப்பா முத்தான பதின்மூன்றாம்
வரையில்தானும் முனையான குளிகையினால்
கண்டுஉவந்தேன் பத்திதரும் நெடுங்காலம்
இருந்தசித்து பாருலகில் சாத்திரத்தின்
முதலாம்சித்து வெத்திபெறும் விநாயக
சித்தர்தம்மை வேகமுடன் மேருவரைதனில்
பார்த்திட்டேனே.

களைப்பே இல்லாமல் தொடர்ந்து பயணம்
செய்யும் குளிகையை செய்து அதனை
பயன்படுத்திடும் முறையை தான் வசிட்ட
முனிவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும்,
அதன் படி அந்த குளிகையை உருவாக்கிய
பின்னர், குருவான காலங்கிநாதரை நினைத்து
வணங்கியபடி மேரு மலையின் பதின் மூன்றாம்
பகுதியில் உள்ள விநாயகரின் சமாதியை
காணச் சென்றதாக குறிப்பிடுகிறார்.

குருவருளினால் அந்த மேருமலையில்
பதின்மூன்றாம் பகுதியில் விநாயகரின்
சமாதியை கண்டதாகவும், அந்த சமாதியானது
மூடப் படாமல் திறந்து இருந்ததாகவும் அங்கே
அங்குசமும், ஒற்றைக் கொம்பும்
யானைமுகமுமாக சமாதி நிலையில் விநாயகர்
பூமியில் இருக்கக் கண்டேன் என்கிறார்.

மூன்று யுகமும் கண்ட சித்தனான விநாயகர்
நான்காம் யுகத்தில், உறுதியாக இரண்டு
கைகளையும் ஏந்திக் கொண்டு சமாதி
நிலையில் இருக்கிறார் என்கிறார். இந்த
தகவல்களை போகர் தனது சீடரான புலிப்பாணி
க்கு சொல்வதாக பாடல்கள் அமைந்திருக்கிறது.

சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள
எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில்
இதுவும் ஒன்று. இது தொடர்பாக யாரும்
விரிவான கட்டுரைகளோ அல்லது
ஆய்வுகளோ செய்திருந்தால் அது பற்றிய
தகவல் தெரிந்தவர்கள் அவற்றை பகிர்ந்து
கொள்ள வேண்டுகிறேன்

Leave a Reply