இணையத்தில் வைரலாகப் பரவும் வீடியோக்களுக்குப் பஞ்சமேயில்லை. புதிதாக வைரலாகப் பரவுக்கொண்டிருக்கும் வீடியோக்களை அடையாளம் காட்டுவதற்கு என்றே ‘பஸ்ஃபீடில்’ தொடங்கி நம்மூரின் ‘ஸ்கூப்வூப்’ வரை பல இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் என்ன சிக்கல் என்றால் எந்த வீடியோ வைரலாகப் பரவும் என்பதை அடையாளம் காண முடியாது என்பதுதான்.
அதாவது ஒரு வீடியோ வைரலாகப் பரவும் முன்னரே அதைக் கணிப்பது என்பது மிகவும் கடினமானது. ஆனால் இப்போது வைரல் வீடியோக்களை ஆரம்பத்திலேயே கண்டறியக்கூடிய வசதியை வீடியோ பகிர்வு சேவை தளமான யூடியூப்பே அறிமுகம் செய்திருக்கிறது.
செய்தித் தளங்களில் பிரபலமாக இருக்கும் அதிகம் வாசிக்கப்படும் செய்திகளை அடையாளம் காட்டும் டிரெண்டிங் பகுதி போல யூடியூப்பில் மேலெழும் வீடியோக்கள் டிரெண்டிங் பகுதியில் பட்டியலிடப்படுகின்றன. டிரெண்டிங் டேப் (https://www.youtube.com/feed/trending) மூலம் அடுத்த வைரல் வீடியோவை கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு சொல்கிறது யூடியூப். இணையவாசகர்கள் ஆமோதிக்கின்றனரா, வைரல் வீடியோக்கள் இதற்குக் கட்டுப்படுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.