முதல்வர் ஜெயலலிதா குணமாக உயிரையே கொடுத்த அதிமுக பெண் தொண்டர்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணமடைய அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்ரு ஒன்றில், சாமியாடியபடி மயங்கி விழுந்த அதிமுக பெண் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நேற்று விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள சிறப்பு வாய்ந்த ‘நின்ற நாராயண பெருமாள் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்த பொன்னுத்தாய் என்ற பெண்ணுக்கு கோயில் வளாகத்தில் திடீரென சாமி வந்தது. இதனால் குலவையிட்டபடி சாமியாடிய அந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு கூடியிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த செய்தி அப்பகுதி மக்களை மிகவும் சோகமடையச் செய்தது.
முதல்வருக்காக தன்னுடைய உயிரையே கொடுத்த பொன்னுத்தாயின் குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.