நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து நடிகர் விஷால் போட்டியிடுவார் என இளம் நடிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவர் போட்டியிட்டால் நிச்சயம் நடிகர் சங்கத்தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது பேட்டியில் விஷால் கூறியதாவது:
எம்.ஜிஆர்., சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் உழைப்பால் உருவான நடிகர் சங்கக் கட்டடம் தற்போது காடுபோல் காட்சியளிக்கிறது. அந்த இடத்தை தனியார் நிறுவனத்துக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதாகக் கூறுகின்றனர். சாதாரணமாக ஓரிரு ஆண்டுகள் வாடகைக்கு விட்டாலே அந்த இடத்தை திரும்பப் பெற முடியாத நிலையைப் பார்த்து வருகிறோம். ஆனால், உங்களைப் போன்ற, எங்களைப்போன்ற நடிகர்களின் வியர்வையால் உருவான நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த இடத்தில் நடிகர் சங்கமே கட்டடம் கட்டுவதாக அறிவிக்கட்டும். நான், அவர்கள் காலில் விழுந்து வணங்கி வரவேற்பேன். அந்த இடத்தில் நடிகர் சங்கம் மூலம் கட்டடம் கட்ட நான், ஜீவா, சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் ஒன்றிணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து அதிலிருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தலாம் என்கிற யோசனையையும் நிர்வாகிகளிடம் முன் வைத்திருக்கிறோம்.
இதேபோல், கேரளத்தில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் மூலம் ரூ. 15 கோடி நிதி திரட்டிய முன்னுதாரணம் உள்ளது. அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டப்பட வேண்டும். அதில் நாடக நடிகர்களின் வாரிசுகளின் திருமணத்தை நடத்த மின் கட்டணத்தை மட்டும் வசூலித்தால் போதும். நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டும் வரை ஓயமாட்டேன். இப்பிரச்னையில் ஒத்துழைக்காவிட்டால், அதை நிறைவேற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. மொத்தத்தில் நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் நலனே முக்கியம். இதில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆளாகிவிடக்கூடாது.
நாடகக் கலைஞர்களை நேரில் சந்திப்பதற்காகவே இங்கு வந்துள்ளதாகவும், நடிகர் சங்கத் தேர்தலுக்காக வாக்குச் சேகரிக்க வரவில்லை என்றும் விஷால் கூறினார். இந்த பேட்டியின்போது, நடிகர் கருணாஸ், பூச்சி முருகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.