‘கதகளி’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கினார் விஷால்

‘கதகளி’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கினார் விஷால்
vishal
கடந்த பொங்கல் தினத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேதரின் தெரசா, கருணாஸ் உள்பட பலர் நடித்த கதகளி படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வண்ணார்பேரவை மாநில பொதுச்செயலாளர் கே.பி.மணிபாபா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
நடிகர் விஷால் நடித்த கதகளி திரைப்படம் பொங்கல் விழாவின் போது வெளியானது. இந்த படத்தில் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமல்லாமல் மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வசனங்கள் வண்ணார், மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை புண்படுத்துவதாகவும், அவமதிப்பதாகவும் உள்ளன.
 
இதன்காரணமாக இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்படங்களில் இதுபோன்ற வசனங்களை அனுமதிப்பது சமூக நீதிக்கு எதிரானது. இந்த வசனங்களை தணிக்கை துறையின் பார்வைக்கு உட்படுத்தி தணிக்கை செய்யவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய திரைப்பட தணிக்கை தலைமை அதிகாரி பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில், படத்தில் அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை நீக்கிவிட்டதாகப் படக்குழுவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிறுபாண்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை ஐகோர்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் விஷாலிடம் நேரடியாகவும் , பிறர்மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

அதனை தொடர்ந்து விஷால் தன்னிச்சையாகவே முன்வந்து திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கதகளியிலுள்ள வில்லன் விஷாலிடம் பேசும் 2௦ நொடி நீளமுள்ள அந்த காட்சி நேற்று முதல் தியேட்டரில் நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுவிட்டதால் இந்த வழக்கு அடுத்த விசாரணையில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Today News: Vishal delete contraversy dialogues in Kathakali

vishal vishal vishal

Leave a Reply