நலிந்த நடிகரின் மனைவியின் சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் கொடுத்த விஷால்
நடிகர் சங்க செயலாளராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் நடிகர் விஷால் பல்வேறு உதவிகள் செய்து வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம். குறிப்பாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது விஷாலின் உதவி மகத்தானது. இந்நிலையில் நேற்று நலிந்த நடிகர் ஒருவரின் மனைவியின் சிகிச்சைக்காக தனது அறக்கட்டளையில் இருந்து ரூ.1,50,000 விஷால் உதவி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் குகன் என்ற நடிகரின் மனைவி சூர்யபிரபா என்பவர் சென்னை பாரதிராஜா மருத்துவமனையில் சமீபத்தில் அட்மிட் ஆனார். அவருக்கு சிகிச்சை செய்ய ரூ.1,90,000 கட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் அவர் திண்டாடியுள்ளார்.
இதுகுறித்து விஷாலின் கவனத்திற்கு எடுத்து சென்றதை அடுத்து விஷால் உடனே பாரதிராஜா மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.1,90,000 என்பதை ரூ.1,50,000ஆக குறைத்து, அந்த பணம் முழுவதையும் விஷால் அறக்கட்டளை மூலம் செலுத்திவிட்டார். தற்போது சூர்யபிரபா சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஷாலின் இந்த மகத்தான உயிர்காக்கும் உதவி குறித்து கோலிவுட்டிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.